புதன், 25 ஜனவரி, 2012

தொடர்-2



قال رسول اللَّه صلَّى اللَّه عليه و سلَّم قال :  مَنْ أحْدثَ في اَمْرِنَا هَدَ مَالَيْسَ فِيهِ فَهُوَ رَدُّ  ( بخاري )

நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை ஒருவர் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும். என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள். நூல் : புகாரி, முஸ்லிம்


ஏகத்துவம் அஸ்தமனமாகி, அறியாமை எனும் காரிருள் மூடிக் கொண்டது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய ஆட்சி காலத்தில்; அரசியல் சாஸன சட்டமும் இஸ்லாம் தான்,

மக்களுக்கு பாட சாலையில் கல்வி திட்டமும் இஸ்லாம் தான்,

மக்கள் உண்பதிலிருந்து உறங்குவது வரையிலான வாழ்க்கை திட்டமும் இஸ்லாம் தான். 

அதற்கடுத்த கலீபாக்களுடைய ஆட்சி காலத்தில் மதீனாவிலும், நபிகள் நாயகத்துடைய முன்னறிவிப்பின் படி வெற்றி கொள்ளப்பட்ட பேரரசுகளிலும் ஆட்சி செய்வதற்கான அரசியல் சாஸன சட்டம் இஸ்லாம் தான்,

வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு பாட சாலைகளில் கல்வி திட்டமும் இஸ்லாம் தான்,

மக்கள் உண்பதிலிருந்து உறங்குவது வரையிலான வாழ்க்கை திட்டமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய ஆட்சி காலம் போல் இஸ்லாமிய நெறிமுறை தான் நடைமுறைப் படுத்தப்பட்டது எவ்வித மாற்றமும் செய்யப்பட வில்லை.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் நடைமுறைப் படுத்தப் பட்டிருந்த இறைச் சட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாதவரை மக்களிடமும் மாற்றம் ஏற்படவில்லை, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எந்த நிலையில் மக்களை விட்டுப் பிறிந்தார்களோ அதே நிலையில் மக்கள் ஏகத்துவ கொள்கையில் நீடித்தார்கள்.     

ஆனால் அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய ஆட்சி காலத்தில் முன்னவர்களுடைய (இறைச்) சட்டம் முற்றிலும் மாற்றப்பட்டு விட்டது, அரசியல் சாஸன சட்டத்தை அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு உருவாக்கிக் கொண்டார்கள். பாடசாலைகளின் கல்வி திட்டமும் மாற்றப்பட்டு விட்டது, இவைகள் இரண்டும் மாற்றப்பட்டதும் மக்களுடைய உண்பதிலிருந்து உறங்குவது வரையிலான வாழ்க்கை திட்டம் தாமாக மாறத் தொடங்கியது.
இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய முடியாத அளவுக்கு அறிஞர்களுடைய குரல்வளைகள் நெறிக்கப்பட்டிருந்தன எந்தளவுக்கென்றால் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் போன்றவர்களுடைய ஆட்சியில் இஸ்லாத்தை சுதந்திரமாகப் பேசவோ, பின்பற்றவோ முடியாத அளவுக்கு அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன அதுவும் எந்தளவுக்கென்றால் நபித் தோழர் அனஸ்(ரலி) அவர்களுக்கு அவனால் மிரட்டல் விடும் அளவுக்கு இஸ்லாத்திற்கு எதிரான சர்வாதிகாரம் ஆட்சியாளர்களால் கோலோச்சியது ( இவர்கள் சஹாபாக்கள் காலங்களில் மிகவும் இறுதியானவர்கள் ) நபித் தோழருக்கே இந்த நிலை என்றால் சாதாரனக் குடிமகன் இஸ்லாத்தை போதித்தால், பின்பற்றினால் என்ன நிலையாக இருக்கும் என்பதை சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் 'டமாஸ்கஸ்' நகரிலிருக்கும் போது நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் அழுது கொண்டிருந்தனர். 'ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்டவைகளில் இந்தத் தொழுகையைத் தவிர வேறு எதனையும் என்னால் (இன்றைய சமூகத்தில்) காண முடியவில்லை. அந்தத் தொழுகையும் கூட பாழ்படுத்தப் பட்ட நிலையிலுள்ளது' என அனஸ்(ரலி) கூறினார். புகாரி 530

ஆட்சியாளர்கள் இஸ்லாமிய சட்டத்தை தூரப்படுத்தியதும், அது மக்களிடமிருந்தும் சிறிது, சிறிதாக விலகிச் சென்று கொண்டிருந்தது இறுதியாக தொழுகையும் பாழ்படுத்தப்படும் நிலையைக் கண்டு அனஸ் (ரலி) அவர்கள் கண்ணீர் விட்டு அழும் நிலை உருவாகியதை மேலேப் பார்த்தோம்.

முஸ்லீமல்லாதார் ஒருவர் ஆட்சிக்கு வந்திருந்தால் கூட அவர்களுக்கு முன் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த இறைச் சட்டத்தை அந்தளவுக்கு மாற்றி இருக்க மாட்டார்கள், மதீனாவிலிருந்து டமாஸ்கஸ் வரை அவரவர் விருப்பத்திற்கேற்றாற் போல் பாடசாலைகளில் கல்வி திட்டங்கள் தொகுக்கப்பட்டன.

அதற்கடுத்து அவர்களால் வெற்றி கொள்ளப்பட்ட அந்தலூசியா தொடங்கி ஆப்பிரிக்கா கண்டம் வரை பெரும் பகுதிகளில் அரிஸ்டாட்டில், பிளேட்டா போன்றவர்களின் கிரேக்க தத்துவங்களே கல்வி திட்டமாக இருந்தது.

நாட்டுக்குள் இஸ்லாம் இருக்கிறதா ? இல்லையா ? என்றுக் கூட தெரியாத அளவுக்கு கேளிக்கைகளில் அரசர்களும், மந்திரிகளும் அரண்மனையில் மூழ்கி திளைத்தனர். ரோமானியர்களுடைய அரண்மனைகளை விஞ்சும் அளவுக்கு அவர்களது அரச பீடங்கள் ஆடம்பர மாளிகைகளாக மாற்றப்பட்டு அது முற்றிலும் ஒரு சிற்றின்ப கேளிக்கை விடுதியைப் போல் ஆகியது.

இவ்வாறு ஏகத்துவம் மெல்ல மெல்ல அஸ்தமனமாகி, அறியாமை எனும் காரிருள் மீண்டும் அரபுலகை மூடிக் கொண்டது.

ஆனாலும் முஸ்லீம்கள் என்ற ரீதியில் ஒரு சில அறிஞர்களுக்கு மார்க்கத்தை தேடும் ஆவல் ஏற்பட்டது ஏகத்துவம் மறைந்து விட்டதால் அவர்களுடைய பார்வை யூத, கிரேக்க, இந்து மத அத்வைதத்தின் பக்கம் திரும்பியது அதுவே இஸ்லாம் எனும் பெயரில் சூஃபித்துவம் மீண்டும் அரபுலகில் பல நூற்றாண்டுகள் கோலோச்சியது.

சூஃபிகளுடைய வருகைக்குப் பின் தொழுகையும் நின்று விட்டது, எனக்குள் அல்லாஹ், அல்லாஹ்வுக்குள் நானாக இருக்கும் போது நான் ஏன் தொழ வேண்டும் என்றுக்கூறி தொழுகையையும் முடிவுக்கு கொண்டு வந்தனர் சூஃபிகள்.

ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் சூஃபித்துவ இமாம்களால் கவரப்பட்டார்கள் அவர்கள் ஆட்சியாளர்களால் சங்கை செய்யப் பட்டார்கள். சிலவேளைகளில்  சூஃபிகளே ஆட்சியாளர்களாகவும் ஆனார்கள்.

நானும் கடவுள், நீயும் கடவுள், கான்பதெல்லாம் கடவுள் என்ற அத்வைத கொள்கை காரர்களால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பிறந்த நாளையும், மொலூதையும் அறிமுகப் படுத்திய விபரத்தை கடந்த கட்டுரையில் பார்த்தோம்.

பெயரளவுக்கு அவர்களும் முஸ்லிம்களாக இருந்ததால் அவர்களிடத்தில் இரண்டு பெருநாள்களும், ஒரு மீலாது விழாவும் சம்பிரதாயத்துக்கு இஸ்லாமிய அமல்களாக இருந்தன. அதையும் அரசே விமர்சையாக நடத்தும் எந்தளவுக்கென்றால் அரசர் எப்பொழுது வந்து தொழுகை நடத்துவாரோ அதுவரை மேளதாளங்களுடன் பெருநாள் ஊர்வலம் வலம் வந்து கொண்டே இருக்கும். இரண்டு ஈட்டி உயரம் வெயில், ஒரு ஈட்டி உயரம் வெயில் என்ற கணக்கெல்லாம் கிடையாது. (தான் முடிசூடும் பொழுதே மார்க்கத்தை முடிசூட்டி விட்டதால் )

இப்படிப் பட்ட வழிகேடர்களிடமிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது தான் அரசியல் வாதிகளால் ஊர்வலமாக நடத்தப்படும் மீலாது விழாவும், அறிஞர்களால் அல்லாஹ்வின் ஆலயங்களில் நடத்தப்படும் மௌலூதும்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்