புதன், 25 ஜனவரி, 2012

தொடர்-1



{5}… النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். திருக்குர்ஆன்  33:6


மீலாது விழாவின் பரினாம வளர்ச்சி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இது ரபியுள் அவ்வல் மாதம் என்பதால் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் கொண்டாடுவது கடமை என்று மக்களிடத்தில் ஆகிவிட்டது. இன்றும் சில முஸ்லிம் அமைப்புகள் மிPலாது விழா எனும் பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தி வருவதைப் பார்க்கிறோம்.

இது அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்கு சொல்லித் தராத ஒன்று !
பின் யாரால் சொல்லப்பட்டது ?
சொல்லப்பட்டவர்களுக்கு வஹீ வந்ததா ?

இனி யாரும் தூதர்கள் வரமாட்டார்கள் என்பதால் தான் உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன் அதை பின்பற்றும் காலமெல்லாம் வழிதவற மாட்டீர்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதி பேருரையில் குறிப்பிட்டார்கள், அந்த இரண்டிலும் இதைப்பற்றி சொல்லவல்லை என்பதுடன் இதை வன்மையாக தடுக்கப்பட்டும் இருக்கிறது.

பின் எந்த மேதாவிகள் இதை நமக்கு கட்டளையிட்டார்கள் ?
அவ்வாறு மார்க்கம் என்ற பெயரில் நமக்கு கட்டளையிட எவருக்கு அதிகாரம் இருக்கிறது ?

இருந்தது ஒருக் கூட்டத்திற்கு அதிகாரம் !
யார் அந்த கூட்டத்தினர் ?

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப்பிறகு ஆட்சி செய்த (கலீபாக்ளைத் தவிர்த்து) ஆட்சியாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட போட்டியும் பூசலும், பொறாமையின் காரணத்தால் மார்க்கத்தை தூரப்படுத்தி விட்டு தான்தோன்றித் தனமான ஆட்சி செய்தார்கள் அதனால் மார்க்கத்திற்கு விரோதமான பல செயல்கள் மார்க்கம் என்ற பெயரில் உட்புகுந்தன அதில் ஒன்று தான் மீலாது விழா ?
 
இறுதி கலீஃபா அலி(ரலி) அவர்களுடைய காலத்தில் நடந்த இருமுனை ( அலி ரலி, முஆவியா ரலி அவர்கள் ) நிர்வாகத்தால் இருதரப்பில் கடும் போட்டிகள் நிலவியது, அதிலிருந்து ஏற்பட்ட போட்டி பொறாமை என்பது அதற்குப் பிறகு ஒரு நிர்வாகமே நடந்தாலும் அந்த நிர்வாகம் முடிந்து வேறொரு நிர்வாகம் ஏற்படுத்தப் பட்டப்பின் முன்னவர் மீது இருந்த பொறாமை காரணத்தால் அவரது ஆட்சி காலத்தின் செயல் திட்டங்கள் முழுமயாக மாற்றப்படும் அது நல்ல திட்டங்களாக இருந்தாலும் சரியே !

இவ்வாறு உமையாக்களுடைய ஆட்சிகாலத்தில் ஆட்சி பொறுப்பில் நியமிக்கப் பட்டவர்களில் பல ஆட்சியாளர்கள் ஷியாக்களாகவும், ஸூஃபி களாகவும், அல்லது ஷியா கொள்கையாலும், ஸூஃபித்துவ கொள்கையாலும் கவரப்பட்டிருந்தார்கள்.

  • அவர்களுடைய அடிப்படை கொள்கை துறவரம் மூலமும், திக்ருகள் மூலமும் அல்லாஹ்வுடனும், அவனது தூதருடன் உலகில் ஒன்றர கலந்து விடலாம் என்பதாகும்.

  • நபியவர்கள் மரணித்தாலும் அவர்களுடைய ஆத்மா பூமியில் உலவுகிறது அவர்கள் புகழப்படுவதால் தரிசனம் தருவார்கள் என்ற அத்வைத கொள்கை வேரூன்றி இருந்ததால்

நபிகள் நாயகத்தை எங்கள் அளவுக்கு நேசிப்பவர் உலகில் எவருமுண்டோ எனும் அளவுக்கு புகழ்ந்து இணைவைப்பில் தாங்களும் மூழ்கி மொத்த சமுதாயத்தையும் மூழ்கடித்தனர். மேற்கானும் புகழ் மாலையின் பரினாம வளர்ச்சியே மௌலூதில் கொண்டு சேர்த்தது.

மொலூது பிறந்த கதை  ?
ஹிஜ்ரி 365ல் அல்முஅத்தீனுல்லாஹ் என்ற பாதிமியீன்களின் ஆட்சியாளர் தான் முதன் முதலில் மக்களை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய பெயரால் மொலூது ஓதுவதற்கும் அன்றைய தினத்தை சந்தோஷமாக கொண்டாடுவதற்கும் கட்டளைப் பிறப்பித்தார். இது மக்களால் நடைமுறை படுத்தப் பட்டதை அறிந்தவர் அதற்கடுத்த வருடம் ஹஸன்(ரலி), ஹூசைன்(ரலி), பாத்திமா(ரலி) அவர்களுடைய பிறந்த தினத்திலும் மொலூது ஓதிக் கொண்டாடுவதற்கு ஏவினார் இவர் ஷியா காரர் என்பது குறிப்பிட தக்கது.(பார்க்க وأحسن الكلام للمطيعي صـ : 4445 كتاب المواعظ والاعتبار للمقريزي  1490

அதன் பிறகு ஹிஜ்ரி 495ல் ஆட்சி பொறுப்பேற்ற அல் அப்லல் பின் அமீர் என்பவர் 130 வருடங்களுக்கு மேல் நடைமுறையில் இருந்த நபிகள் நாயகத்துடைய குடும்பத்தார் பெயரில் ஓதிவந்த மௌலூத்களை  தடை செய்தார்.( இதற்கு காரணம் மார்க்கப் பற்றல்ல கடந்த கால ஆட்சியாளருடைய திட்டங்களை மாற்றுவது )

அதன் பிறகு ஹிஜ்ரி 525ல் ஆட்சி பொறுப்பில் அமர்த்தப்பட்ட அல் ஆமிர் பின் அஹ்காமில்லாஹ் என்ற கலீபா கடந்த கால ஆட்சியாளர் அல் அப்லல் பின் அமீரால் தடை செய்;யப்பட்ட மொலூதை திரும்பக் கொண்டு வந்தார்;.( இதற்கும் காரணம் மார்க்கப் பற்றல்ல கடந்த கால ஆட்சியாளருடைய செயல் திட்டங்களை மாற்றுவது )

ஹிஜ்ரி 570ல் உமர் அல் மலாஇ என்பவர் ஈராக்கின் வடபகுதியில் அல்மவ்லிஸ் என்ற பகுதியின் கவர்னகராக நியமிக்கப் பட்டிருந்தார் இவர் வடிகட்டிய சூஃபித்துவ வாதி நபிகள் நாயகத்துடன் ஒன்றர கலந்து விடவேண்டும் என்ற வெறி உச்சந்தலையில் ஏறவே அவரது சபைக்கு பிரபல கவிஞர்கள் வரவழைக்கப்பட்டு குணங்குடியாரை மிஞ்சும் அளவுக்கு புகழ்மாலை பாடப்பட்டு அவரது அரசவையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களது பிறந்த நாளை கொண்டாடினார்.

ஹிஜ்ரி 630ல் முபருதீன் என்ற ஆட்சியாளர் கடந்த ஆட்சியாளருடைய செயல் திட்டமான நபிகள் நாயகத்தின் மீது கவி பாடுவதை நிருத்தி விடாமல் அதைவிட இன்னும் வித்தியாசமாக அதே நேரத்தில் சிறப்பாகவும் செய்ய ஆசைப்பட்டார் அதனால் பிரபல கவிஞர்களின் புகழ் மாலையுடன் நடண திக்ராக மாற்றினார் ( அதாவது வளையம் போல் நின்று கொண்டு '' யாநபி ஸலாமலைக்கும் '' '' யா ரசூல் ஸலாமலைக்கும் '' என்று காட்டுக் கூச்சல் போடுவது ).

ஓவ்வொரு கவிஞராக ஆளுக்கொரு புகழ்மாலை என்றிருந்ததை 633ல் அவருடைய ஆட்சி காலத்தில் வாழ்ந்த பிரபல கவிஞர் இப்னு தஹ்யா என்பவர் அத்தன்வீர் ஃபீ பஸீருன் நதீர் என்ற பெயரில் ஒரே புகழ் மாலையாக ஆக்கிக் கொடுத்து அதற்காக 1000 தீனார்களை பரிசாகவும் பெற்றார்.

இவ்வாறு போட்டி, பொறாமையில் ஆட்சி செய்ததால் ஏகத்துவத்திற்கெதிரான அனைத்து தீமைகளும் மெல்ல, மெல்ல வேர் விட்டு மாபெரும் விருட்சமாகி விட்டது. 

கெய்ரோவை ஆக்ரமித்த நெப்போலியன்
பணிரெண்டாம் நூற்றாண்டில் கெய்ரோவை பிரான்ஸ் படைகள் ஆக்ரமமித்ததும் முஸ்லீம்கள் மீலாது விழாவை கொண்டாடாமல் தற்காலிமாக நிருத்தி வைத்திருந்தனர்.

நபிகள் நாயகத்துடைய பெயரால் ஆட்டம், பாட்டு, நடணம் நடப்பது அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தார்கள் என்பதால் மன்னர் நெப்போலியன் மக்களை அழைத்து ஏன் மொலூதை நிருத்தினிர்கள் என்று கேட்க ? அவர்களுடைய ஆக்ரமிப்பினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை  காரணம் கூற ! இதைக் கேட்டதும் சொந்தப் பணத்திலிருந்து பிரான்ஸ் நாணயங்ளை கொடுத்து மீலாது விழாவை விமர்சையாக நடத்த உத்தரவிடுகிறான்.

இப்பொhழுது கிருஸ்தவ நெப்போலியனுடைய பணத்தில் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு  இன்னிசை முழக்கத்துடன் எஜிப்திய முஸ்லிம்களால் பிறந்த நாள் கொண்டாடப் படுகிறது.

அல்லாஹ் நாடினால் மீதியையும் எழுதுவோம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

தொடர்-2



قال رسول اللَّه صلَّى اللَّه عليه و سلَّم قال :  مَنْ أحْدثَ في اَمْرِنَا هَدَ مَالَيْسَ فِيهِ فَهُوَ رَدُّ  ( بخاري )

நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை ஒருவர் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும். என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள். நூல் : புகாரி, முஸ்லிம்


ஏகத்துவம் அஸ்தமனமாகி, அறியாமை எனும் காரிருள் மூடிக் கொண்டது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய ஆட்சி காலத்தில்; அரசியல் சாஸன சட்டமும் இஸ்லாம் தான்,

மக்களுக்கு பாட சாலையில் கல்வி திட்டமும் இஸ்லாம் தான்,

மக்கள் உண்பதிலிருந்து உறங்குவது வரையிலான வாழ்க்கை திட்டமும் இஸ்லாம் தான். 

அதற்கடுத்த கலீபாக்களுடைய ஆட்சி காலத்தில் மதீனாவிலும், நபிகள் நாயகத்துடைய முன்னறிவிப்பின் படி வெற்றி கொள்ளப்பட்ட பேரரசுகளிலும் ஆட்சி செய்வதற்கான அரசியல் சாஸன சட்டம் இஸ்லாம் தான்,

வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு பாட சாலைகளில் கல்வி திட்டமும் இஸ்லாம் தான்,

மக்கள் உண்பதிலிருந்து உறங்குவது வரையிலான வாழ்க்கை திட்டமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய ஆட்சி காலம் போல் இஸ்லாமிய நெறிமுறை தான் நடைமுறைப் படுத்தப்பட்டது எவ்வித மாற்றமும் செய்யப்பட வில்லை.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் நடைமுறைப் படுத்தப் பட்டிருந்த இறைச் சட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாதவரை மக்களிடமும் மாற்றம் ஏற்படவில்லை, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எந்த நிலையில் மக்களை விட்டுப் பிறிந்தார்களோ அதே நிலையில் மக்கள் ஏகத்துவ கொள்கையில் நீடித்தார்கள்.     

ஆனால் அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய ஆட்சி காலத்தில் முன்னவர்களுடைய (இறைச்) சட்டம் முற்றிலும் மாற்றப்பட்டு விட்டது, அரசியல் சாஸன சட்டத்தை அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு உருவாக்கிக் கொண்டார்கள். பாடசாலைகளின் கல்வி திட்டமும் மாற்றப்பட்டு விட்டது, இவைகள் இரண்டும் மாற்றப்பட்டதும் மக்களுடைய உண்பதிலிருந்து உறங்குவது வரையிலான வாழ்க்கை திட்டம் தாமாக மாறத் தொடங்கியது.
இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய முடியாத அளவுக்கு அறிஞர்களுடைய குரல்வளைகள் நெறிக்கப்பட்டிருந்தன எந்தளவுக்கென்றால் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் போன்றவர்களுடைய ஆட்சியில் இஸ்லாத்தை சுதந்திரமாகப் பேசவோ, பின்பற்றவோ முடியாத அளவுக்கு அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன அதுவும் எந்தளவுக்கென்றால் நபித் தோழர் அனஸ்(ரலி) அவர்களுக்கு அவனால் மிரட்டல் விடும் அளவுக்கு இஸ்லாத்திற்கு எதிரான சர்வாதிகாரம் ஆட்சியாளர்களால் கோலோச்சியது ( இவர்கள் சஹாபாக்கள் காலங்களில் மிகவும் இறுதியானவர்கள் ) நபித் தோழருக்கே இந்த நிலை என்றால் சாதாரனக் குடிமகன் இஸ்லாத்தை போதித்தால், பின்பற்றினால் என்ன நிலையாக இருக்கும் என்பதை சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் 'டமாஸ்கஸ்' நகரிலிருக்கும் போது நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் அழுது கொண்டிருந்தனர். 'ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்டவைகளில் இந்தத் தொழுகையைத் தவிர வேறு எதனையும் என்னால் (இன்றைய சமூகத்தில்) காண முடியவில்லை. அந்தத் தொழுகையும் கூட பாழ்படுத்தப் பட்ட நிலையிலுள்ளது' என அனஸ்(ரலி) கூறினார். புகாரி 530

ஆட்சியாளர்கள் இஸ்லாமிய சட்டத்தை தூரப்படுத்தியதும், அது மக்களிடமிருந்தும் சிறிது, சிறிதாக விலகிச் சென்று கொண்டிருந்தது இறுதியாக தொழுகையும் பாழ்படுத்தப்படும் நிலையைக் கண்டு அனஸ் (ரலி) அவர்கள் கண்ணீர் விட்டு அழும் நிலை உருவாகியதை மேலேப் பார்த்தோம்.

முஸ்லீமல்லாதார் ஒருவர் ஆட்சிக்கு வந்திருந்தால் கூட அவர்களுக்கு முன் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த இறைச் சட்டத்தை அந்தளவுக்கு மாற்றி இருக்க மாட்டார்கள், மதீனாவிலிருந்து டமாஸ்கஸ் வரை அவரவர் விருப்பத்திற்கேற்றாற் போல் பாடசாலைகளில் கல்வி திட்டங்கள் தொகுக்கப்பட்டன.

அதற்கடுத்து அவர்களால் வெற்றி கொள்ளப்பட்ட அந்தலூசியா தொடங்கி ஆப்பிரிக்கா கண்டம் வரை பெரும் பகுதிகளில் அரிஸ்டாட்டில், பிளேட்டா போன்றவர்களின் கிரேக்க தத்துவங்களே கல்வி திட்டமாக இருந்தது.

நாட்டுக்குள் இஸ்லாம் இருக்கிறதா ? இல்லையா ? என்றுக் கூட தெரியாத அளவுக்கு கேளிக்கைகளில் அரசர்களும், மந்திரிகளும் அரண்மனையில் மூழ்கி திளைத்தனர். ரோமானியர்களுடைய அரண்மனைகளை விஞ்சும் அளவுக்கு அவர்களது அரச பீடங்கள் ஆடம்பர மாளிகைகளாக மாற்றப்பட்டு அது முற்றிலும் ஒரு சிற்றின்ப கேளிக்கை விடுதியைப் போல் ஆகியது.

இவ்வாறு ஏகத்துவம் மெல்ல மெல்ல அஸ்தமனமாகி, அறியாமை எனும் காரிருள் மீண்டும் அரபுலகை மூடிக் கொண்டது.

ஆனாலும் முஸ்லீம்கள் என்ற ரீதியில் ஒரு சில அறிஞர்களுக்கு மார்க்கத்தை தேடும் ஆவல் ஏற்பட்டது ஏகத்துவம் மறைந்து விட்டதால் அவர்களுடைய பார்வை யூத, கிரேக்க, இந்து மத அத்வைதத்தின் பக்கம் திரும்பியது அதுவே இஸ்லாம் எனும் பெயரில் சூஃபித்துவம் மீண்டும் அரபுலகில் பல நூற்றாண்டுகள் கோலோச்சியது.

சூஃபிகளுடைய வருகைக்குப் பின் தொழுகையும் நின்று விட்டது, எனக்குள் அல்லாஹ், அல்லாஹ்வுக்குள் நானாக இருக்கும் போது நான் ஏன் தொழ வேண்டும் என்றுக்கூறி தொழுகையையும் முடிவுக்கு கொண்டு வந்தனர் சூஃபிகள்.

ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் சூஃபித்துவ இமாம்களால் கவரப்பட்டார்கள் அவர்கள் ஆட்சியாளர்களால் சங்கை செய்யப் பட்டார்கள். சிலவேளைகளில்  சூஃபிகளே ஆட்சியாளர்களாகவும் ஆனார்கள்.

நானும் கடவுள், நீயும் கடவுள், கான்பதெல்லாம் கடவுள் என்ற அத்வைத கொள்கை காரர்களால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பிறந்த நாளையும், மொலூதையும் அறிமுகப் படுத்திய விபரத்தை கடந்த கட்டுரையில் பார்த்தோம்.

பெயரளவுக்கு அவர்களும் முஸ்லிம்களாக இருந்ததால் அவர்களிடத்தில் இரண்டு பெருநாள்களும், ஒரு மீலாது விழாவும் சம்பிரதாயத்துக்கு இஸ்லாமிய அமல்களாக இருந்தன. அதையும் அரசே விமர்சையாக நடத்தும் எந்தளவுக்கென்றால் அரசர் எப்பொழுது வந்து தொழுகை நடத்துவாரோ அதுவரை மேளதாளங்களுடன் பெருநாள் ஊர்வலம் வலம் வந்து கொண்டே இருக்கும். இரண்டு ஈட்டி உயரம் வெயில், ஒரு ஈட்டி உயரம் வெயில் என்ற கணக்கெல்லாம் கிடையாது. (தான் முடிசூடும் பொழுதே மார்க்கத்தை முடிசூட்டி விட்டதால் )

இப்படிப் பட்ட வழிகேடர்களிடமிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது தான் அரசியல் வாதிகளால் ஊர்வலமாக நடத்தப்படும் மீலாது விழாவும், அறிஞர்களால் அல்லாஹ்வின் ஆலயங்களில் நடத்தப்படும் மௌலூதும்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

தொடர்-3



قال رسول اللّه صلَّى اللَّه عليه و سلَّم :  مَنْ مَّاتَ يُشْرِكْ بِاللَّهِ شَيْئاً دّخَلَ النَّاَرَ 
 ( بخاري)

இப்னு மஸ்வூத் ( ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்விற்கு எதையாவது இணை வைத்தவராக மரணித்தால் அவர் நரகம் செல்வார்  என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல் : புகாரி


குஃப்ர் எனும் காரிருள் நீங்கி ஏகத்துவம் எனும் ஒளி மீண்டும் மலர்நதது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இஸ்லாத்தை மறந்த முஸ்லிம் அரசர்கள் மார்க்கம் எனும் பெயரில் எதைப் பின்பற்றினார்களோ, அதையே அவர்களால் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் ஜிஸ்யா வரி செலுத்த மணமின்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களுக்கும் மார்க்கமாக்கினார்கள், இந்தியாவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களும் இதனடிப்படையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய பெயரால் ரபியுள் அவ்வல் மாதத்தில் ஓதும் மௌலூதை மார்க்கமாக ஏற்றுக் கொண்டார்கள்.

இவ்வாறாக உமையாக்கள், அதற்கடுத்து, அப்பாஸியாக்கள், அதற்கடுத்து உதுமானியர்கள் என்று இஸ்லாமிய ஆட்சி கை மாறி, மாறி ஹிஜ்ரி 11ம் நூற்றாண்டுகளில் மக்காவை அடுத்த தாயிஃப் போன்ற நகரங்களில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுடைய பெயரிலும், எமன் பிரதேசத்தில் இப்னு அள்வர் என்பவருடைய பெயரிலும், மிஸ்ரு பிரதேசத்தில் ரிஃபாயி, செய்யது பதவி என்பவருடைய பெயரிலும், ஈராக்கில் ரசூலுல்லாஹ் குடும்பத்தினருக்கும் வழிபாட்டுத் தலங்கள் உருவாக்கப்பட்டு வணங்கி வந்தார்கள் இன்னும் ஜின்களை வழிபடக் கூடியவர்களாகவும், ஜின்களுடைய பெயரில் அறுத்துப் பலியிடுபவர்களாகவும், இன்ன கலீஃபா இன்ன மரத்தடியில் அமர்ந்தார்கள் என்றுக்கூறி பெரும், பெரும் மரங்களையும் சுற்றி வலம் வந்தார்கள் மொத்த அரபுலகும் இணை வைத்து வணங்கும் நிலைக்கு ஹிஜ்ரி 12ம் நூற்றாண்டில் மாறி விட்டிருந்தது.

இந்த நிலை உருவானதற்கு முஸ்லீம் நாடுகளை ஆட்சி செய்த முஸ்லீம் பெயர் தாங்கி அரசர்கள் இறைச் சட்டத்தை ஓரம் கட்டியது தான் காரணம் .

இவைகள் எவ்வாறு மீண்டும் துடைத்தெறியப்பட்டு சவுதியில் இஸ்லாமிய ஆட்சி மலர்ந்தது ?
ஹிஜ்ரி 1115ல் சவுதி அரேபியா அல் கஸீம் மாகாணத்தில் ' உஐனா ' என்ற கிராமத்தில் உள்ள அப்துல் வஹாப் அவர்களுடைய குடும்பத்தினர் ஏகத்துவத்தைப் பின்பற்றி வாழ்ந்தார்கள்.

அப்துல்வஹாப் அவர்களுடைய மகன் கண்ணியத்திற்குரிய முஹம்மது அவர்கள் 10 வயதில் குர்ஆனை மணனம் செய்து முடித்தார்கள். அவர்கள் தனது 20 வயது இளமைப் பருவத்தில் அல்லாஹ்வுடைய ஏகத்துவ மார்க்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து இணைவைத்தலை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று தனது தந்தை அவர்களிடத்தில் ஆலோசனை கேட்டார்கள். அதற்கவர்கள் நாமும், நமது குடும்பத்தித்தினரும் ஏகஇறைவனை மட்டும் தான் வணங்கி வருகிறோம் அவ்வாறே தொடர்ந்து செய்வோம் ஊரில் உள்ள இணைவைத்தலை ஒழிக்க புறப்பட்டால் இன்று இருக்கக் கூடிய சூழ்நிலையில் நம்மை ஒழித்துக் கட்டி விடுவார்கள் என்றுக் கூறி அவர்களது முயற்சியை தடு;த்து நிருத்தி விடுகிறார்கள்.

ஆனாலும் அவர்களுடைய மணதில் ஏகத்துவத்தை நிலை நிருத்த வேண்டும் என்ற சிந்தனை அதிவேகமாக பரவுகிறது அப்பொழுது அவர்களுடைய தகப்பனார் இறந்து விடுகிறார்கள். 

இஸ்லாமிய சட்டத்தை ஓறிரு குடும்பத்தினர் மட்டும் ஒளிந்து, மறைந்து பின்பற்றுவதை விட ஆட்சியாளர்களிடம் எடுத்துச் சென்று அவர்கள் மூலமாக அரசியல் சாஸன சட்டமாக்கி விட்டால் இடையூறு இல்லாமல் மொத்த மக்களும் பின்பற்றுவதற்கு வசதியாக இருக்கும் என்பதாலும், மேலும் இது தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் நடைமுறைப் படுத்தப்பட்ட முறை என்பதால் முதலில் ஆட்சியாளர்களை சந்தித்து தனது திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்க முயற்சிக்கிறார்கள் கண்ணியத்திற்குரிய முஹம்மது அவர்கள்.

முதலில் தான் பிறந்து வளர்ந்த அல்கசீம் மண்டல கவர்னரிடம் ஏகத்துவத்தை எடுத்துக் கூறி  ஏகத்துவ ஆட்சியை பிரகடன படுத்தச் சொல்கிறார்கள். இதைக்கேட்ட கவர்னர் அதை நிராகரித்ததுடன் அவர்களை நாடு கடத்தவும் உத்தரவிடுகிறார் ஏகத்துவத்தை சொன்னால் இதெல்லாம் நடக்குமென்று ஏற்கனவே அறிந்திருந்த கண்ணியத்திற்குரிய முஹம்மது அவர்கள் அதை சகித்துக்கொண்டு அல்லாஹ்விடத்தில் அழுது மன்றாடியவர்களாக சொந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்து அன்னிய தேசத்திற்கு நஜ்த் ( ரியாத் ) பிரதேசத்தை  நோக்கி செல்கிறார்கள்.

கடந்த கால ஆட்சியாளர்கள் இஸ்லாமிய சட்டத்தை ஓரம் கட்டியதால் ஏற்பட்ட விளைவுகளே மேற்கானும் கப்ரு வணக்கம் உருவாகியது என்பதை அறிந்திருந்த கண்ணியத்திற்குரிய முஹம்மது அவர்கள் முதலில் ஆட்சியாளர்களை பக்குவப்படுத்தி அவர்கள் மூலம் மக்களுக்கு ஏகத்துவத்தை கொண்டு செல்ல வேண்டும்  என்;ற இலக்கில் பின் வாங்காமல் உறுதியாக நின்று '' திரய்யா '' ( ரியாத் ) கவர்னர் முஹம்மது பின் சவுத் அவர்களை சந்தி;த்து ஏகத்துவத்தை எடுத்துக்கூறி இஸ்லாமிய ஆட்சியை பிரகடனப் படுத்தக் கூறுகிறார்கள்.

இதைக் கேட்டதும் முதலில் மறுக்கிறார்கள் ஆனாலும் சீரழிந்து போயுள்ள சமுதாயத்திற்கு முட்டுக் கொடுப்பதற்கு அரசு அதிகாரத்தின் மூலமல்லாது தனித் தனி நபராக சந்தித்து அவர்களை ஒருங்கிணைத்து செல்வதற்குள் அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதிய ஆளுனர் மூலம் அதை பலப்பிரயோகம் செய்து முடக்கி விடலாம் அதனால் மார்ப்பற்றுள்ள உங்களைப் போன்ற ஆளுனருடைய ஒத்துழைப்பு அவசியம் தேவை என்பதை மீ;ண்டும்; வலியுருத்திக் கூறவே அல்லாஹ்வும் இந்த கூட்டு முயற்சியை வெற்றி பெறச்செய்கிறான் முஹம்மது பின் சவூத் அவர்கள் சம்மதிக்கிறார்கள்.

கண்ணியத்திற்குரிய இமாம் முஹம்மது பின் அப்துல் வஹாப் அவர்களும், நஜ்த் கவர்னர் முஹம்மது பின் சவூத் அவர்களும் இணைந்து இணை வைத்தலுக்கெதிரான கிளர்ச்சியில் இறங்குகிறார்கள் முதல் கட்டமாக 'திரய்யா'வில் உள்ள கப்ருகளும், இணைவைப்பு மரங்களும் தகர்த்தெறியப் படுகின்றன, அதற்கடுத்து அரசியல் சாஸன சட்டமாக இஸ்லாம் பிரகடனப் படுத்தப்படுகின்றது.

மது, மாது, சூது, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி அனைத்தும் தடை செய்யப்பட்டு, இதை மீறுவோர் மீது இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நடைமுறைப் படுத்தப் படுகிறது.

இது உலகம் முழுவதும் காட்டு தீ போல் பரவுகிறது.
மொத்த உலகிலிருந்தும் கடும் எதிர்ப்பு கனைகள் திரய்யாவை நோக்கிப் பாய்கிறது,

தர்ஹா ட்ரஸ்டிகளெல்லாம் கொதித்தெழுகிறார்கள், அவர்கள் புதிய மார்க்கத்தை கொண்டு வந்திருக்கின்றார்கள், அவர்களை ஒழித்துக் கட்டுங்கள் என்று ஆவேசமாக கூக்குரலெழுப்புகின்றார்கள்.

இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா ?

உலகம் முழுவதிலிமிருந்து எழுந்த எதிர்ப்பு குரல்களில் முதலில் ஒலித்தது இந்திய முஸ்லீம்களின் குரல் தான் என்பதுடன் அந்த மாமேதை அவர்களுக்கும் அவர்களை பின்பற்றுவோருக்கும் '' வஹ்ஹாபி '' என்கின்ற பட்டப் பெயரை சூட்டி மகிழ்ந்ததும் இந்திய முஸ்லீம்கள் தான்.

இன்றும் ஏகத்துவ அறிஞரையும் அவரது பிரச்சாரத்தால் கவரப்பட்டவர்களையும் ''வஹ்ஹாபிகள்'' என்றுரைப்பதற்கு இதுவே காரணமாகும்.

இவ்வாறு உலகம் முழுவதிலிமிருந்து எழுந்த எதிர்ப்பின் காரணத்தால் நஜ்த் மீண்டும் கப்று வணங்கிகளால் கைப்பற்றப்படுகிறது, ஆனாலும் அவர்கள் விடாமல் போராடி இணைவைப்பாளர்களிடமிருந்து மீண்டும் திரயா கோட்டையை கைப்பற்றி விடுகிறார்கள். இவ்வாறாக ஒன்றிரண்டு முறை மாறி, மாறிச் சென்றாலும் அதற்கடுத்து வந்த மன்னர் அப்துல் அஜூஸ் அப்துல் ரஹ்மான் பின் சவூத் அவர்கள்  முன்னவர்களுடைய தவ்ஹீத் அடிப்படையிலான ஆட்சியை நடைமுறைப்படுத்தி  வீர தீரத்துடன் போரிட்டு சுற்றியுள்ள அனைத்து சிறு, சிறு அரசுகளையும் கைப்பற்றி அவற்றில் ஏகத்துவ ஆட்சியை அமல் படுத்தினார் ரஹிமல்லாஹூ அன்ஹூ.

இதை டாக்டர் அப்துல் ஹக்கீம் இப்னு அப்துஸ் ஸலாம் மதனி அவர்கள் எழுதிய 'தவ்றுல் மம்லக்கத்துல் அரபியத்துஸ் ஸவுதியா ஃபீ ஹிக்மத்துல் இஸ்லாம் ' எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள். இந்த வரலாற்று நூல் சவுதி அரேபியாவின் பிரபல நூலகங்களிலும் அரபியில் இருக்கிறது.

இத்தொடரில் கண்ணியத்திற்குரிய இமாம் முஹம்மது பின் அப்துல் வஹாப் அவர்களுடைய ஏகத்துவ பிரச்சாரம் ஏன் சேர்க்கப்பட்டது ? என்பதை அல்லாஹ் நாடினால் எழுதுவோம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

தொடர்-4



الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا
...இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை  உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்;. எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்;. இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப பொருந்திக் கொண்டேன். ... 5:3


ஃபாத்திமியீன்களின் ஆட்சி காலத்தில் தான் மௌலூது ஆரம்பிக்கப்பட்டது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய காலத்திலும், ஸஹாபாக்கள் காலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த இஸ்லாமிய சட்டம் ஒதுக்கப்பட்டு, ஏகத்துவ அறிஞர்களுடைய குரல்களும் ஒடுக்கப்பட்டதால் யூத, கிரேக்க, ஹிந்து மத அத்வைத கொள்கைகள் புதிய அறிஞர்களிடத்தில் தோன்றி அவைகள் இஸ்லாமிய நாடுகளில் மார்க்கம் என்று 10 நூற்றாண்டுகளுக்கு மேல் கோலோச்சியது.

இருண்ட 10 நூற்றாண்டுகளில் ஒரு சில ஏகத்துவ சிந்தனை கொண்ட அறிஞர்கள் அவ்வப்போது தோன்றினாலும் அவர்களுடைய பிரச்சாரம் மக்களிடம் சென்று வலிமை அடைவதற்கு முன் அதை அரசு இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிருத்தி விடும்.

அதனால் கண்ணியத்திற்குரிய இமாம் முஹம்மது அப்துல் வஹாப் அவர்கள் அரச அதிகாரத்தில் இஸ்லாமிய நன்னெறியை புகுத்தி விடுவதற்காக தொடர்ந்து அரும் பாடுபட்டு அதில் வெற்றி கண்டார்கள்.

இதன் மூலம் அரசு அதிகாரிகளுக்கும், அறிஞர்களுக்கும் மத்தியில் மாபெரும் இணக்கம் ஏற்பட்டது எந்தளவுக்கென்றால் அறிஞர்களுடைய குரலே அரசர்களுடைய குரலாக அரசவையில் ஒலிக்கத் தொடங்கியது, எந்த ஒரு புதிய சட்டமும் மார்க்க அறிஞருடைய ஆலோசனையின்றி அரசவையில் இயற்ற முடியாது என்ற நிலை வளைகுடா யுத்தம் வரை நீடித்தது.

இப்பொழுது அந்த நிலை காலச் சூழ்நிலையால் மாற்றம் ஏற்பட்டாலும் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அந்த நிலை உருவாகும், உருவாக வேண்டுமென்றால் அதற்கான ட்ராக் இது தான் என்று கண்ணியத்திற்குரிய இமாம் முஹம்மது அப்துல் வஹாப் அவர்களால் போடப்பட்டு விட்டது.

இப்பொழுது விஷயத்திற்கு வந்து விடுவோம்.

மூன்று கட்டமான இஸ்லாமிய ஆட்சி காலம் எவ்வாறு இருந்தது என்பதை குறிப்பிட்டோம்.

அதில் முதலாவதாக,
நபிகள் நாயகம்(ஸல்)அவர்களுடைய ஆட்சிகாலமும், அதையொட்டிய ஸஹாபாக்களுடைய ஆட்சி காலம்,

அதற்கடுத்து இரண்டாவதாக,
முஸ்லிம் பெயர் தாங்கி அரசர்களுடைய ஆட்சி காலம்,

அதற்கடுத்து மூன்றாவதாக,
இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹாப் அவர்களால் மறுமலர்ச்சி அடைந்த ஏகத்துவ ஆட்சிகாலம்.

மேல்படி மாறுபட்ட மூன்று காலகட்டத்தில்
எந்த காலகட்டத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பெயரால் மௌலூது அறிமுகமாகியது ? அது ஏற்புடைய காலகட்டமா ? என்பதை சிந்தித்துக் கொள்ள வேண்டும்;.

அதிலும் குறிப்பாக ஃபாத்திமியீன்கள் காலத்தில் தான் மௌலூது முதன் முதலாக அறிமுகப் படுத்தப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. அந்த ஃபாத்திமியீன்கள் என்றால் பாத்திமா(ரலி) அவர்களுடைய வாரிசுகள் என்று அர்த்தம். பாத்திமா(ரலி) அவர்களுடைய வாரிசுகள் யாராக இருக்க முடியும் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இருக்காது. அவர்கள் வடிகட்டிய ஷியாக்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அவர்கள் அலி(ரலி) அவர்களுடைய காலத்தில் உருவாகி அவர்களை துதி பாடக்கூடிய கூட்டமாக மாறியவர்களை அலி(ரலி) அவர்களே துடைத்தெறிந்து விட்டார்கள் எஞ்சிய ஒன்றிரண்டு ஷியாக்களால்  அலி(ரலி) அவர்களும் ஷஹீதாக்கப் பட்டார்கள்.

அலி(ரலி) அவர்களை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து இனப் பெருக்கமானவர்கள் தங்களை அலி(ரலி) அவர்களை கொலை செய்தவர்கள் என்று இனம் கண்டு கொண்டால் மீண்டும் கலையெடுக்கப்பட்டு விடுவோம் என்று கருதியவர்கள் ஃபாத்திமியீன்கள் என்று பெயரிட்டுக் கொண்டார்கள் பெயர் தான் மாற்;றப்பட்டது அவர்கள் அலி(ரலி) அவர்களைக் கொலை செய்தவர்களின் வாரிசுகள் தான், கொள்கை ஒன்று தான்.

கடைந்தெடுத்த ஷியாக்களால் தான் முதன் முதலில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பிறந்த நாள் கொண்டாட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது.

இறுதியாக கெய்ரோவில் நெப்போலியன் படையினர் பேண்ட் வாத்தியங்கள் முழக்கத்துடன் எகிப்திய முஸ்லீம்கள் பிறந்த நாளை  ஊர்வலமாக நடத்தினார்கள். நடனம், ஊர்வலம் என்பனவெல்லாம் அன்றைய வடிகட்டிய ரோமானிய கலாச்சாரம் என்பதால் தான் அன்றும், இன்றும் அதற்கு விழா என்ற பெயர் சூட்டப்பட்டது. 

கடந்த காலத்தில் மீலாது விழாவை அரசே பொறுப்பேற்று விமர்சையாக செய்ததால் தான் இன்றளவும்   முஸ்லிம் அரசியல் வாதிகள் மீலூது விழாவை நெப்போலியன் ஸ்டைலில் ( பேண்டு, வாத்தியம் மட்டும் தவிர்த்து) ஊர்வலமாக நடத்துகிறார்கள்.

மீலாது விழாவை அரசியல் வாதிகள் ஊர்வலமாக நடத்தியதை பார்த்த உலமாப் பெருமக்கள் ஹிஜ்ரி 570ல் உமர் அல் மலாஇ ஸ்டைலில் புகழ் மாலையாக ஏக இறைவனுடைய ஆலயங்களிலும், தங்களது வீடுகளிலும் ரபியுள் அவ்வல் மாதம் முழுவதும் மொலூது ஓதுகிறார்கள்.

இதைப் பார்த்த கப்று வணங்கிகள் உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்றுக் கூறி தத்தமது பகுதிகளில் அடங்கியுள்ள பிரபல அவ்லியா(?)க்கள் பெயரிலும் மௌலூது ஓதி பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த புகழ் மாலையை அரபியில் ஓதுவதற்கு ஆலிம்களே  தகுதியானவர்கள் என்றுக்கூறி பாமர மக்களை நம்ப வைத்து தங்களுக்கு தொழிலாக்கினார்கள். 

நபிகள் நாயகத்திற்கு மரியாதை கொடு;க்கிறோம் என்றுக் கூறி ஆரம்பித்த மொலூது இந்தியாவின் மூலை முடுக்குகளில் மொய்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி, நாகூர் சாகுல் ஹமீது பாஷா, ஏர்வாடி இப்றாஹீம்ஷா, என்று தொடங்கி இன்னும் பட்டி, தொட்டி குக்கிராமங்களில் அடங்கியுள்ளதாக கூறும் அனைத்து அவ்லியாக்களுடைய பெயராலும் ஓதப்படுவது கடமையாக்கப் பட்டு விட்டது.

இதுவரை மௌலூதுடைய பரினாம வளர்ச்சியை மட்டும் பார்த்தோம் மௌலூதுடைய வாசகங்களைப் புரட்டினால் ஒவ்வொரு வரிகளும் 23 வருடங்கள் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து கட்டியெழுப்பிய தவ்ஹீத் கோட்டையின் ஒவ்வொரு தூண்களும் மொலூது புகழ் மாலையின் ஒவ்வொரு வரிகளால் தகரந்து விடும் அளவுக்கு அமைந்திருப்பதைக காணலாம்.

நபி(ஸல்) அவர்கள் மீது எவ்வாறு மரியாதை செலுத்துவது என்பதை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு சொல்லித் தராமல் விட வில்லை.


                         لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. திருக்குர்ஆன் 33:21.   



 قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ
நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால், என்னைப் பின் பற்றுங்கள்; ! அல்லாஹ் உங்களை விரும்புவான்; உங்கள் பாவங்களை மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக ! 3:31.              

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை எவ்வாறு மதிப்பது என்பதை அல்லாஹ் நாடினால் அடுத்து எழுதுவோம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

தொடர்-5



أَلَمْ يَعْلَمُواْ أَنَّهُ مَن يُحَادِدِ اللّهَ وَرَسُولَهُ فَأَنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدًا فِيهَا ذَلِكَ الْخِزْيُ الْعَظِيمُ

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக நடப்போருக்கு நரக நெருப்பு உள்ளது அதில் நிரந்தரமாக இருப்பார்கள் இதுவே மாபெரும் இழிவாகும் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா ? திருக்குர்ஆன் 9:63



அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எவ்வாறு மதிப்பது ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இதற்கு முன் பெருமானார்(ஸல்) அவர்கள் தங்களுடைய மரணத் தருவாயில் தொழுகையை இருவருடைய துணையுடன் கால்கள் தரையில் இழுபட தொழச் சென்றது பின்வரும் சந்ததிகள் அதைப் பார்த்து பின்பற்ற வேண்டும் எனும் நோக்கிலாகும் என்பதை பார்த்தோம். இப்பொழுது அதே மரண தருவாயில் சக்ராத் ஹாலுடைய கடுமையான வேதனையின் பொழுது அண்ணலார் அவர்களுடைய நாவிலிருந்து கோபம் கொப்பளிக்க வெளியான வார்த்தை கூறும் அர்த்தத்தை பார்ப்போம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, தம் முகத்தின் மீது சதுரமான கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும்போது அதைத் தம் முகத்திலிருந்து அகற்றி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். தம் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கினார்கள்'' என்று கூறி, அவர்கள் செய்ததைப் போன்று செய்யக் கூடாது என்று (தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள். ஆதார நூல்: புகாரி, அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா சித்தீக்கா (ரலி) அவர்கள். 

இப்பொழுது லாஜிக்காக ஒரு விஷயத்தை சிந்திப்போம், தன் மீது உயிரையே வைத்திருந்த தந்தையுடைய உயிர் பிரியும் தருவாயில் இறுதியாக அவர்களது நாவிலிருந்து என்ன வார்த்தை வருகிறது எதைச் சொல்வார்கள் என்று ஆவலாக ஒவ்வொரு தனயனும் எதிர்பார்த்திருப்பர் அவ்வேளை அவர் எதாவது ஒன்றைக் கூறி இதை எனக்காக செய்யுங்கள் என்றுக் கூறினால் கேட்ட மாத்திரத்தில் அதை உயிரைப் பணயம் வைத்தேனும் இது எனது தந்தையுடைய இறுதி ஆசை என்று நிறைவேற்றுவதற்கு தயாராகுவோம் எங்ஙனமேனும் செய்து முடிப்போம் இதுவே தன் உயிரையே வைத்து வளர்த்தெடுத்த தந்தையை தனது உயிரலும் மேலாக மதித்ததாக கனிக்கப்படும்.

23 வருட நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் தங்களுடைய சமுதாயத்தவர்களுடைய மறுமை வாழ்க்கைக்காகவே அமைத்துக் கொண்டார்கள் அப்படிப்பட்ட நபியின் மீது உயிரையே வைத்துள்ளோம் என்றுக் கூறுகின்றவர்கள் நபியின் மரணத் தருவாயில் இறுதியாக சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும் அவ்வாறு செய்தால் நபியை மதித்ததாகஉயிரிலும் மேலாக மதித்ததாக கருதப்படும்.

ஆனால் இங்குள்ள நிலைமை என்ன ? நபியை மதிக்கின்றோம் என்றுக் கூறிக் கொண்டு நபியுடைய சொல்லுக்கு எதிரான விஷயத்தை கொள்கையாக, மார்க்க கடமையாக ஆக்கிக் கொண்டு செயல்படுகிறார்கள்.
நபிகள் நாயகத்தை மதிப்பதால் தான் மௌலூது ஒதுகிறோம் பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்றுக் கூறுகின்றவர்கள் அல்லாஹ்வை விட நபியை உயர்த்திப் பிடிக்கும் மொலூது புகழ்மாலையில் கூறப்படும் ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே தருகிறோம்.

பாவமன்னிப்பு
நீங்களே பாவங்களை மன்னிப்பவர்.
அழித்தொழிக்கும் குற்றங்களையும் மன்னிப்பவர்.
தவறுகளை மறைக்கக் கூடியவரும் நீங்களே.
சிரமங்களை நீக்கக் கூடியவரும் நீங்களே.
நன்மைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளவரே!
உயர்ந்த மதிப்புடையவரே!
என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்!
என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்!
''யா நபி(நபியே!)'' என்று அழைத்துப் பாடப்படும் முதல் பாடலின் சில வரிகள் இவை. 

குற்றமும் பாவமும் செய்து விட்டவனே!
மன்னிப்புக்கேள்! குற்றத்தை ஒப்புக்கொள். அருளை எதிர்பார்.
சரணடைந்து விடு! (இத்தனையையும்) ஹரமில் (மதீனாவில்) தங்கியுள்ளவர்களிடம் கேள்!''
'சல்லூ அலாகைரில் இபாத்' என்ற பாடலின் சில வரிகள் இவை.
உங்களின் மன்னிப்பை என் மீது சொரிந்து என் மீது அருள் புரியுங்கள்.
'யாஸையிதீ' என்ற பாடலின் வரி இது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்தும் இந்த வரிகளை உண்மை முஸ்லிம்கள் ஏற்க முடியுமா? குர்ஆனையும் நபிவழியையும் மதிக்கக் கூடியவர்கள் இந்த நச்சுக் கருத்தை ஆதரிக்க முடியுமாபாவங்கள் செய்தோர் அதற்கான மன்னிப்பை இறைவனிடம் தான் பெற வேண்டும். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். 

'அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?'  (அல்குர்ஆன்3:135)
'நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிக்கிறான்'  (அல்குர்ஆன்39:53) 

தன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது எனவும் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே உள்ளது எனவும் அவற்றில் வேறு யாருக்கும் பங்கில்லை எனவும் இந்த வசனங்கள் மூலம் இறைவன் அறிவிக்கிறான்ஆதார நூல்: சுப்ஹான மவ்லிது

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய கடுமையான மரண வேதனையின் போது கோபம் கொப்பளிக்க கூறிய அல்லாஹ்வின் சாபம் யார் மீது இறங்கும் ? என்பதை சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். 

பாவங்கள் மண்ணிக்கப்பட்டு விட்டதாக வாக்களிக்கப்பட்ட பெருமானார்(ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும் இறைவனிடம் பாவமண்ணிப்புக் கோருபவர்களாக இருந்துள்ளார்கள் என்று ஏராளமான அறிவிப்புகள் வந்திருக்கின்றன அவ்வாறிருக்கையில் அவர்களிடத்தில் பெரும்பாவங்களையெல்லாம் மண்ணிக்கக் கோரும் மௌலூது புகழ்மாலை கூறுவது ஏகத்துவமா ? இணை வைத்தலா

அரபு நாடுகளுக்கு தனது பிள்ளைகளை அனுப்பி வைத்தால் பொருளீட்டுவதுடன், மார்க்க அறிவையும் ஈட்டி வருவார்கள் என்றுக்கருதி அதிக சம்பளம் கிடைக்கும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளை தவிர்த்து அரபு நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் அரபு நாடுகளிலும் சில முஸ்லீம் பெயர் தாங்கி அமைப்புகள் ரபியுள் அவ்வல் மாதங்களில் ஊரிலிருந்து மார்க்க அறிஞர்கள்(?) வரவழைக்கப்பட்டு நபிகள் நாயகத்தின் பெயரால் பிறந்த நாள் விழா (?) நடத்துகிறார்கள் இதைப் பார்க்கும் பாமர முஸ்லீம்கள் இங்கும் பிறந்த நாள் விழா நடத்தப்படுவதால் இது மார்க்க அங்கீகாரம் பெற்றவைதான் என்று நினைத்தால் அவரகளுடைய மறுமை நிலை என்னவாகும் என்பதை அந்த சகோதர அமைப்புகள் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர்.

நேரத்தை ஒதுக்கி பொருளை விரயம் செய்து மார்க்கம் என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளால்  மார்க்க ஞானம் வளர வேண்டும் மாறாக அஞ்ஞானத்திற்கு கொண்டு போய் விடகூடாது. அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாத, அனுமதிக்காத ஒன்றை யார் உருவாக்கினாலும் அது இறைவனால் நிராகிரக்கப்படுவதுடன் அதற்கான மறுமை பலனும் '' 0 '' வாகி விடுவதுடன் பாவப்பட்டியலிலும் சேர்க்கப் பட்டு விடும் என்பதை கீழ்கானும் நபிமொழி எச்சரிக்கிறது. நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை ஒருவர் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா சித்தீக்கா (ரழி) அவர்கள். நூல் : புகாரி, முஸ்லிம்

கப்று வணக்கத்தை உள்ளேப் புகுத்தி, அதை சிலை வணக்கமாக மாற்றி நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் செய்து விட்டால் இஸ்லாம் தனித்து விளங்காது என்ற யூத, நஸ்ரானிகளுடைய சதித் திட்டம் ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த ஷியாக்கள் மூலமாக முதலில் திணிக்கப்பட்டு  அதற்கடுத்து அவர்களுடைய சதி திட்டம் செம்மையாக ஹிஜ்ரி 12ம் நூற்றாண்டுவரை குறைந்தது 9 நூற்றாண்டுகள் அரோபியாவில் தொடங்கி ஆசியா கண்டம் முழுவதுமாக கப்று வணக்கம் கோலோச்சியது.

இதற்கு முன் சென்ற சமுதாயம் இறைதூதர்களுடைய கப்றை வணங்குமிடமாக ஆக்கிய வரலாறு அறிந்திருந்ததால் பெருமானார்(ஸல்) அவர்கள் தங்களது மரணத் தருவாயில் கடும் வெப்பத்தால் துடித்துக் கொண்டிருக்கும் போதும் மிக சிரமத்திற்கு இடையே மேற்கானும் வார்த்தைகளை கூறினார்கள். மீலாது விழாவை ஊர்வலமாகவும், மொலூதை அல்லாஹ்வின் ஆலயத்தில் வைத்து ஓதுபவர்களும் மேற்கானும் யூத, நஸ்ரானிகளுடைய சதி திட்டத்தின் அடிப்படையில் அமைந்த இருண்ட இஸ்லாமிய வரலாற்றை சிந்திக்க கடமைப் பட்டிருக்கின்றனர்.

தன்பை பெற்று வளர்த்து ஆளாக்கிய தனது தந்தையுடைய கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக எந்தளவு தனயன் முயற்சியில் இறங்குவாரோ அதை விட நம் நபியுடைய இறுதி ஆசை முக்கியமல்லவா ?  எவரும் தன்னுடைய தந்தை, மகனை விட உலக மக்கள் அனைவரையும் விட நான் அவருக்கு அதிக விருப்பமானவனாக ஆகும்வரை முஃமினாக முடியாது. என்று (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் கட்டளையிட்டிருக்க அதற்கு எதிராக தன் தந்தை மகன், மற்றும் உறவினர்கள், உலக மக்கள் அனைவரும் ஒரு கருத்தைக் கூறினாலும் அல்லாஹ்வின் தூதரின் கருத்திற்கே முதலிடம் கொடுத்து மற்றவர்களின் சொல்லை நிராகரித்து விடவேண்டும் என்பதை மேற்கானும் நபிமொழி கூறுகிறது. 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்